இன்று (08.03.2023) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தமிழக பாஜக சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் கோவையில் சாதனை மகளிர் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “என்னுடைய பேருக்கு பிறகு ஒரு எம்.பி., எம்.எல்.ஏ போடுவதற்காக நான் வரவில்லை. பாஜக வளர வேண்டும் என்பது தான் என் இலக்கு. அதற்கான முயற்சிகளை எடுப்பவனாகத் தான் இருப்பேன். இன்னொரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளரக்கூடாது. பாஜக தனக்குரிய இடத்தை தமிழகத்தில் கண்டுபிடித்து மக்களின் அன்பைப் பெற்று வளர வேண்டும்.
மதுரையில் நான் செய்தியாளர்களிடம் கூறியது என் கருத்து. அதிலிருந்து ஒரு படி மேலேயோ கீழேயோ கிடையாது. யாராவது என்னைப் பற்றி சொல்வது அது அவர்களது கருத்துகள். வேறு வேறு கட்சிகளில் இருக்கும் தலைவர்கள் ஆட்சியில் இருந்த கட்சிகளில் இருந்து தலைவரானவர்கள். ஆனால் பாஜக அப்படி அல்ல. யாரும் போகாத பாதையில் போய்க்கொண்டு இருக்கிறோம். பாஜகவை அதிமுகவுடனோ வேறு எந்த கட்சியிடமோ ஒப்பிடாதீர்கள். மற்ற கட்சியில் இருப்பவர்கள் அனைத்து தலைவர்களும் கட்சி வளர்ந்து ஆட்சிக்கு வந்த பின்பே அதில் இணைந்துள்ளார்கள். ஆனால், பாஜக அப்படி இல்லை. கட்சி எப்பொழுது ஆட்சிக்கு வரும் என்பது தெரியாமலேயே லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.
அதிமுக பாஜக கூட்டணியின் மகிமை என்பது எங்களது கருத்துகளை நாங்கள் உரக்க சொல்கிறோம். எல்லோரும் அவர்களது கருத்துகளை சொல்வதற்கு உரிமை உள்ளது. எங்களது பதையில் நாங்கள் இப்படி தான் இருப்போம். இன்னொருவருக்கு சாமரம் வீச வேண்டும் என்பது இந்த கூட்டணியில் இல்லை. 2024 தேர்தல் மோடிக்கான தேர்தல். 10 ஆண்டுகள் அவர் என்ன செய்தார் என்பதை கொண்டு சென்று சேர்ப்பது எங்களது வேலை. இதில் உரசலோ மோதலோ இல்லை” எனக் கூறினார்.