பாஜகவை முகவரியே இல்லாமல் செய்துவிடுவேன் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆவேசமாக பேசியுள்ளார்.

ஆந்திரப்பிரதேசம் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமீபகாலமாக ஆளும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி தந்துவிட்டு, பின்னர் அதற்கு வாய்ப்பே இல்லை என மத்திய அரசு கூறிய நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறும் என அறிவித்து; அதை நிறைவேற்றிக் காட்டினார். மேலும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முடக்கிய எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நேற்று பாஜகவினர் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேலிக்கூத்து என விமர்சித்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது, ‘நாடு முழுவதிலும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் வாழும் மக்களை மோடி கஷ்டப்படுத்தி வருகிறார். எங்கள் மாநிலத்தையும் சிறப்பு அந்தஸ்து ஆசை காட்டி ஏமாற்றிவிட்டார். மோடியை பிரதமராக்க நான்தான் மிகப்பெரிய முயற்சிகளில் ஈடுபட்டேன். இப்போது நானே அவரைத் தோற்கடிப்பதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டேன். நான் நினைத்தால் பாஜகவை முகவரியே இல்லாமல் செய்துவிடுவேன். நான் மோடியை எதிர்க்கத் தொடங்கியதில் இருந்துதான், நாடு முழுவதும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன’ என பேசியுள்ளார்.
அதேபோல், மோடி ஆட்சி ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தை நினைவுப்படுத்துகிறது. தமிழகத்தில் எப்படி மோடிக்கு எதிர்ப்பு இருந்ததோ, அதேயளவிற்கு அவர் ஆந்திரா வந்தாலும் எதிர்ப்பு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.