திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாவட்டச் செயலாளருமான நத்தம் விசுவநாதன் போட்டியிடுகிறார். அதைத் தொடர்ந்து நத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முளையூர், காட்டு வேலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதனிடையே இன்று முளையூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அவரை வரவேற்கும் விதமாக ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர், அதிமுக ஆதரவாளர் ஒருவர் வரிசையாகத் தரையில் வைக்கப்பட்டிருந்த ஆரத்தி தட்டுகளுக்குப் பணம் கொடுக்கும் நிகழ்வும் அரங்கேறியது. அங்கு களத்தில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தனது பாக்கெட்டில் இருந்து பணத்தைப் பட்டுவாடா செய்தார். வேட்புமனுத் தாக்கல் இன்னும் செய்யாத நிலையில் பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தேர்தல் அதிகாரியான அந்தோனிதாஸுக்கு (வீடியோ பிரிவு) தெரியவந்தது. இதையடுத்து, தேர்தல் அதிகாரி, தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.