நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால் எதிர் கட்சி அந்தஸ்த்தையும் இழந்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த தலைவரை காங்கிரஸ் சீக்கிரமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் சோனியா காந்திக்கு மிகவும் நம்பிக்கையானவராக இருக்கும் முகுல் வாஸ்னிக் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இவர் நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அவர்களது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் என்பது குறிப்படத்தக்கது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளராகவும் முகுல் வாஸ்னிக் இருந்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும், சோனியாவின் உதவியாளராகவும் முகுல் வாஸ்னிக் செயல்பட்டுள்ளார்.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த முகுல் வாஸ்னிக் இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல் மன்மோகன் சிங்கையும் தலைவராக்க சிலர் கோரிக்கை வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் வயது மூப்பினால் மன்மோகன் சிங்கால் களப்பணியில் அதிகமாக ஈடுபட சிரமமாக இருக்கும் துன்று கூறி வருகின்றனர். ஆகையால் முகுல் வாஸ்னிக் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் தலைவர் பதவி குறித்து வெளியிடவில்லை என்பது குறிப்படத்தக்கது.