சென்னையில் வீராவேசம் செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'என்.எல்.சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக இழப்பீடு கிடைக்க குரல் கொடுத்தது திமுக தான். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி கொடுக்க பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி உயர்த்திக் கொடுக்க வைத்தது திமுக அரசு தான். திமுக அரசு மீதும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீதும் விவசாயிகள் வைத்துள்ள நம்பிக்கையை அன்புமணியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அமைதியாக இருக்கும் மக்களைத் தூண்டிவிட்டு சதித் திட்டத்தை உருவாக்குகிறார்.
சென்னையில் வீராவேசமாகப் பேசும் அன்புமணி டெல்லியில் கைக்கட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? என்.எல்.சி விரிவாக்கத்தைக் கைவிடமாட்டோம் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோசி எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்த போது குறைந்தபட்சம் மாநில அவையிலிருந்து அன்புமணி ராமதாஸ் வெளிநடப்பு செய்யாதது ஏன்? அவசரப்பட்டால் மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கதவைத் தட்டும் என்பது அன்புமணிக்குத் தெரியும். மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மண்ணையும் மக்களையும் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் திமுக எடுக்கும் என முதலமைச்சரை நம்பும் வட மாவட்ட மக்களை அன்புமணியின் கபட நாடகங்கள் மூலம் திசை திருப்பி விட முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.