தர்மபுரி தொகுதியில் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடியிடம் மனு அளித்திருக்கிறார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி. காவிரி உபரி நீர்த் திட்டம் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினார்.
எடப்பாடியுடனான அன்புமணியின் இச்சந்திப்பை அரசியல் ரீதியாக கேலி செய்கின்றனர் திமுகவினர். அதற்காக, அவர்கள் ரிபீட் செய்யும் அன்புமணியின் வார்த்தைகள் இவை -
“நிர்வாகம்னா என்னன்னு தெரியுமா எடப்பாடிக்கு?”
“குரங்கு கையில் பூமாலை கிடைச்சமாதிரி இப்ப எடப்பாடி கையில் தமிழகம் இருக்கு..”
“அம்மாவின் அடிமைகள்தான் ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்சும்.. அவங்களுக்கு எதுவுமே தெரியாது..”
“அவங்க டயர் நக்கிகள்“
நேரம் பார்த்து அன்புமணியின் பழைய பேச்சுக்களை திமுகவினர் எடுத்துவிட, பதிலடியாக தற்போதைய திமுக கூட்டணியில் உள்ள வைகோ போன்றவர்களின் அன்றைய திமுக எதிர்ப்புப் பேச்சை வெளியிடத் துடித்துக் கொண்டிருக்கிறது அதிமுக கூட்டணி.
வாக்காளர்களுக்குப் புளித்துப்போகும் அளவுக்கு அரைத்த மாவையே திரும்ப அரைக்கின்ற அரசியலை என்னவென்று சொல்வது?