தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 இடங்களில் திமுக 4, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2, மதிமுக 1 என திமுக கூட்டணி 7 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தக் கூட்டணியில் பேரூராட்சி தலைவர் பதவி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளராக 3ஆவது வார்டு உறுப்பினர் ரா.சரவணன் அறிவிக்கப்பட்டார். அதேபோல, பாமக சார்பில் வெற்றி பெற்ற வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலினும் பேரூராட்சித் தலைவராக முயற்சி செய்துவந்தார்.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் கடந்த 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற நிலையில், ஆடுதுறை பேரூராட்சியில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டதால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆடுதுறை பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாமகவைச் சேர்ந்த ம.க.ஸ்டாலின் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.