காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், அழுத்தம் கொடுக்காத மாநில அரசையும் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய டி.டி.வி. தினகரன் மயிலாடுதுறையில் முடித்திருக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கடந்த மாதம் 25ம் தேதி தஞ்சையில் உண்ணாவிரதம் இருந்தனர். அதனை தொடர்ந்து திருச்சியில் கடந்த 3ம் தேதி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பிறகு கடந்த 7ம் தேதி தர்மபுரியில் மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் ஆர்பாட்டம் செய்யும் போராட்டத்தை துவங்கி, சேலம், கரூர், தஞ்சை, திருவாரூரை தொடர்ந்து இறுதியாக நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் முடித்துள்ளனர்.
ஆர்பாட்டத்தில் பேசிய டி.டி.வி. தினகரன், மத்திய அரசை கண்டித்ததை விட திவாகரனை மிரட்டி கண்டித்ததே அதிகம். அவர் பேசுகையில், "தமிழகத்தில் பழனிச்சாமி, பன்னீர் செல்வத்தின் ஆட்சி தொடர்வதை மக்கள் விரும்பவில்லை என்பதை கூட அறியாத சிலர், எனக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக பேட்டி கொடுக்கிறார்கள்.
அந்த பேச்சை கேட்கும்போது எனக்கு சிரிப்புத்தான் வருது. எந்த கட்சியின் பெயரை சொல்லி 30 ஆண்டு காலமாக இந்த பகுதியில் உலாவினாரோ, யாருடைய உறவினர் என்பதால் தொண்டர்களும், நிர்வாகிகளும் மதித்தார்களோ அவர்களுக்கு துரோகம் இழைக்கிறார்.
நானும் சசிகலாவும் ஏதோ அவருக்கு துரோகம் செய்து விட்டதாகவும், அதிமுகவிற்கு அவர் சுதந்திரம் வாங்கி கொடுத்துவிட்டதை போல ஆவேசமாக பேசுகிறார். இது நல்லது கிடையாது. 2002-ல் பைபாஸ் ஆப்ரேஷன் செய்து கொண்டவர். 60 வயதை தாண்டியவர். சற்று அமைதியாக வீட்டில் ஓய்வெடுத்தால் அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் நல்லது. ஒரு பையன் அவருக்கு, திருமணம் செய்து பார்க்கணும். அதவிட்டுட்டு ஆவேசமா பேசி ஏதாவது நடந்துட்டா நான் பொறுப்பல்ல.
இன்னும் ஒரு வாரம் தான் பத்திரிக்காரங்க உங்கள பார்ப்பாங்க... அதுக்கு பிறகு அமைச்சர் காமராஜால் பிரச்சனை வந்தால், எங்க எஸ்.காமராஜ்தான் வரனும் என்பதை மனதில் கொண்டு பேச வேண்டும்" என திவாகரனை எச்சரித்து முடித்தார்.