தஞ்சை நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. முதல்கட்டமாக இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளர் காந்தி மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மற்ற வேட்பாளர்கள் திங்கள் கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. தஞ்சை ஜெயராம் மஹாலில் தி.மு.க முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய நிலையில், கடந்த 20-ம் தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்கள். கூட்டத்திற்கு முன்பு 50 பேருடன் வந்து தேர்தல் ஆணையத்தால் மறைக்கப்படாமல் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு தஞ்சை இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர் காந்தி மற்றும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி கூட்டணி வேட்பாளர் த.மா.கா என்.ஆர்.நடராஜனும் மாலை அணிவித்தனர்.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை அ.ம.மு.க வினர் தொடக்கத்திலேயே அ.தி.மு.க.வை மிரள வைக்க வேண்டும் என்பதற்காக தஞ்சை தொகுதி முழுவதும் இருந்து கட்சி தொண்டர்களை வாகனங்கள் மூலம் அழைத்து வந்து, ரயிலடி சாலையில் நிறுத்தினார்கள். ‘50 பேருடன் ஆளும் அ.தி.மு.க வந்து மாலை போட்டது. ஆனா நாங்க 5 ஆயிரம் பேரோட வந்து மாலை போடுறோம் பாருங்க. அப்ப அ.தி.மு.க யார் பக்கம் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். இந்த கூட்டத்தை பார்த்தே அ.தி.மு.க வைத்திலிங்கம் தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்’ என்றனர்.
இடைத்தேர்தல் வேட்பாளர் எம்.எல.ஏ பதவியை பறிகொடுத்த ரெங்கசாமியும், நாடாளுமன்ற வேட்பாளர் பிரிஸ்ட் பல்கலைக்கழக அதிபர் முருகேசனும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை போட்டுவிட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தச் சென்றனர்.