சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப் பேரவையில் கேள்வி பதில் நேரம் துவங்கியது. கேள்வி பதில் நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக பேச முற்பட்டார்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு, அரசினர் தீர்மானம் உள்ளதால் கவன ஈர்ப்பு தீர்மானம் நாளை எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்க வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில் சட்டப் பேரவை சபாநாயகர் அப்பாவு, அதிமுக உறுப்பினர்களிடம் தயவு செய்து ஒத்துழைப்பு கொடுங்கள் என்றும் இது குறித்து அவையில் நீண்ட விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறினார்.
சட்டப் பேரவையில் இது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக நாங்கள் இதுவரை வைத்த கோரிக்கையை ஏற்கவில்லை எனக் குற்றம் சாட்டினார். மேலும் சட்டப் பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவித்த நிலையில் எதிர்க்கட்சியினரின் கேள்வி ஒளிபரப்பப்படாமல் அமைச்சர்கள் பதிலளிப்பது மட்டும் ஒளிபரப்பப்படுவதாக குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானம் நாளை எடுத்துக் கொள்ளப்படும் என சபாநாயகர் அறிவித்ததைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.