
விருதுநகரில் மோதல் காரணமாக பல்பொருள் அங்காடி கடையின் முன்பு கடையை திறக்க விடாமல் ஒரு லோடு கருங்கற்களை கொட்டிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்பிகே சாலை பகுதியில் அமுதா பல்பொருள் அங்காடி என்ற ஒரு கடை செயல்பட்டு வருகிறது. தனியார் உறவின்முறை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த அங்காடியை விஜயேஷ் கண்ணா என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் விஜயேஷ் கண்ணாவிற்கும் சில நபர்களுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக கடையை திறக்க விடாமல் செய்வதற்கு நள்ளிரவில் டிப்பர் லாரியில் ஒரு லோடு கருங்கற்களை கொண்டு வந்து கடையின் முன்பு கொட்டிவிட்டு சென்றுள்ளனர்.
காலையில் அங்கு வந்து பார்த்த பொழுது கடையின் முன்பு ஷட்டரை திறக்க முடியாத அளவிற்கு கடை வாசலில் கற்கள் கொட்டப்பட்டது கண்டு கடையின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். கடையில் வெளிப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது மர்ம நபர்கள் டிப்பர் லாரியில் கருங்கற்களை கொட்டிவிட்டு சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், அருப்புக்கோட்டை ஏஎஸ்பியிடம் புகார் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.