
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கும், தங்களுக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்று பாகிஸ்தான் கூறினாலும், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சில பயங்கரவாத அமைப்பு தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று இந்தியா சந்தேகிக்கிறது. அந்த பயங்கரவாத அமைப்பை, பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரிப்பதாக கூறி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு அதிரடி முடிவுகளை இந்தியா தொடர்ந்து எடுத்து வருகிறது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும், வாகா எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும், சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்துள்ளது. இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு எதிராக, இந்தியா உடனான சிம்லா ஒப்பந்தம் ரத்து, அட்டாரி எல்லை மூடல் உள்ளிட்ட முடிவுகளை பாகிஸ்தான் எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் சூழ்நிலை மிகவும் கவலையளிப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளும் போர் பதற்றத்தைத் தணித்து பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.