Skip to main content

சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்... - மகிழ்ச்சியில் ராஜேஸ்வரி பிரியாவின் AMAK

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

ddd

 

பாமகவில் 2017 மார்ச் மாதம் முதல் பாமக இளைஞர் சங்கச் செயலாளர் பதவி வகித்தவர் ராஜேஸ்வரி பிரியா. பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததும், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து அனைத்து மக்கள் அரசியல் கட்சியைத் தொடங்கினார். கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் இக்கட்சி போட்டியிட்டது. இந்தநிலையில் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழகம் மற்றும் புதுவையில் இக்கட்சிக்கு கேஸ் சிலிண்டர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

 

இதுகுறித்து ராஜேஸ்வரி பிரியா கூறுகையில், “மக்களின் அத்தியாவசியமான பொருள் எங்களின் கட்சி சின்னமாக கிடைத்தது, மக்களுக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தேவை இன்றியமையாததாக மாறும் என்பதையே காட்டுகிறது. மேலும் கேஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தைக் கண்டித்து தமிழகத்தில் முதன்முறையாக ஆர்ப்பாட்டம்  நடத்திய கட்சி என்ற முறையில் எங்களுக்கு இந்த கேஸ் சிலிண்டர் சின்னம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டது எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறோம். மக்களும் இதனை ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை” எனக் கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"சாதிவாரியாகப் பிரித்து ஆட்சி செய்கிறார் பிரதமர்" - ராஜேஸ்வரி பிரியா 

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

 Rajeswari Priya Interview

 

மணிப்பூர் கொடூரம் குறித்து தன்னுடைய கருத்துக்களை அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா நம்முடன் பகிர்கிறார்

 

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக ரோட்டில் இழுத்துச் சென்ற இதுபோன்ற சம்பவம் இப்போதுதான் முதல் முறையாக நடக்கிறது. பெண்கள் இன்று முன்னேறி வருகிறார்கள் என்று நாம் பேசுகிறோம். ஆனால் அவர்களை நிர்வாணமாகச் சாலையில் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்யும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதைப் பார்க்கும்போது உலக நாடுகள் என்ன நினைப்பார்கள்? பெண்ணைக் கொச்சைப்படுத்துவது தான் பழிவாங்கும் மனிதர்களின் மனநிலையாக இருக்கிறது. 

 

இவ்வளவு கொடுமைகள் நடந்து பல காலம் ஆன பிறகு விசாரணை நடத்துவது என்ன மாதிரியான மனநிலை என்பது தெரியவில்லை. வெளியே தெரிவதற்கு முன்பே ஆள்பவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இதற்கான தீர்வு கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்குத் துளியும் இல்லை. பெண்கள் அங்கு பாதிக்கப்படுகிறார்கள் என்கிற புகார் வந்த பிறகும் தேசிய மகளிர் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாக்கினைப் பெற வேண்டும் என்பது மட்டும்தான் இவர்களுடைய நோக்கமாக இருக்கிறது.

 

இதற்கான தீர்வைத் தேட பிரதமர் ஏன் முயற்சிக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சாதி, மதம், இனம் ஆகிய அடிப்படையில் மக்களைப் பிரித்து வாக்குகளைப் பெறுவது தான் இன்று நடந்து வருகிறது. சாதி சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு எட்டப்படுவதே இல்லை. அரசியல் கட்சிகள் சாதிய வாக்குகளை நோக்கித் தான் பயணம் மேற்கொள்கிறார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. மணிப்பூரில் பெண்களுக்கு அந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.

 

இது போன்ற விஷயங்களை இனி யாரும் செய்யத் துணியக் கூடாது என்கிற வகையில் அந்த தண்டனை அமைய வேண்டும். பெண்களை இவ்வாறு நிர்வாணப்படுத்துவதற்கு அவர்களுக்கு எப்படி மனம் வந்தது? இப்படி ஒரு சம்பவம் நடந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மிக விரைவாக இவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கினால் தான் இதுபோன்ற விஷயங்கள் இனி நடக்காமல் இருக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிச்சயம் தடுக்கப்பட வேண்டும்.

 

 

Next Story

“இந்த மனநிலை மோசமான அரசியல் நிலைமையை எடுத்துக் காட்டுகிறது..” ராஜேஸ்வரிபிரியா

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

Rajeshwaripiriya condemn delhi woman police case

 

டெல்லி காவல்துறையில் பணிபுரிந்த சபியா என்ற பெண், கடந்த வாரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெண் காவலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரிபிரியா அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

அந்த அறிக்கையில் அவர், “பெண்கள் கொடூரமான‌ முறையில் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவது தொடர்ச்சியாக இந்தியாவில் நடந்து கொண்டே உள்ளன. அதிகபட்சம் ஒரு வார காலம் இது போன்ற சம்பவங்கள் குறித்து பேசுவதும் போராடுவதும் பிறகு அப்படியே எல்லோரும் கடந்து செல்கிறோம். பாதிக்கப்பட்ட பெண் என்ன மதம் என்று தெரிந்த பிறகு அம்மதத்திற்கான பிரச்னையாக மாறி உருவெடுத்துவிடுகிறது. 

 

அந்தக் குற்றத்தை அதே மதத்தினைச் சார்ந்த நபர்கள் செய்திருந்தால் அப்படியே போராட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. எப்போது சாதி மதங்களை கடந்து ஒரு பெண்ணிற்கு எதிரான குற்றம் என்று இந்த சமூகம் பார்க்கிறதோ அன்றுதான் குற்றங்களை குறைக்க முடியும். பாலியல் குற்றவாளி எந்தப் பின்புலத்தை கொண்டிருந்தாலும் அவன் மோசமான குற்றவாளியாகவே பார்க்க வேண்டும்.

 

டெல்லியில் பெண் காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்ட செய்தி நெஞ்சை பிளக்கச் செய்கிறது. இதற்கான நீதி கேட்டு இசுலாமியர்கள் மட்டுமே போராடி வருவது வேதனை அளிக்கிறது. என் சகோதரி எப்படி துடித்துப் போய் உயிரை விட்டிருப்பாள் என்று நினைத்தால் இதயம் கனக்கிறது. 

 

மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் செய்ய மட்டும் அந்த வார்த்தையை பயன்படுத்தி கொண்டு இது இசுலாமியர் பிரச்னை என்று எண்ணி போராட்டத்தில் இறங்காமல் பணம் படைத்த பெரிய கட்சிகள் தூரமாக நின்று வேடிக்கை பார்க்கும் மனநிலை  மோசமான அரசியல் நிலைமையை எடுத்து காட்டுகிறது. இது ஒரு பெண்ணிற்கு எதிரான குற்றம். பெண்கள் அனைவருமே ஒடுக்கப்பட்ட இனமாக உலகெங்கிலும் பார்க்கப்படுகின்றனர். பெண்களுக்குள் ஒற்றுமையும் போராட்ட குணமும் அதிகமாக தேவைபடும் காலம் இது. தீர்வை நோக்கி பயணிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.