நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேட்டில் அதிமுகவின் 59 ஆவது துவக்க விழா மாநாடு நடைபெற்றது. இதற்காக அமைக்கப்பட்ட விழா மேடையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இபிஎஸ்-இன் ஆதரவாளர்கள் இருந்தனர். தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி ''அதிமுகவை வீழ்ந்துவிடும் மு.க.ஸ்டாலின் பகல் கனவு கண்டு வருகிறார். ஆனால் அது பலிக்காது. அடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது. அப்போது அதிமுக இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெறும்.
குடிமராமத்து, நீர் மேலாண்மை ஆகிய பல திட்டங்களை அதிமுக அரசு தனது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தியது. ஆனால் தற்போது ஆளும் திமுக அரசு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வராமல் அதிமுக மீது வீண் பழியைச் சுமத்தி வருகின்றது. இன்றைக்கு ஸ்டாலின் பேசுகிறார் அதிமுக பிளவு பட்டிருக்கிறது என்று சொல்கிறார். மூன்று, நான்காக உடைந்து போய் இருக்கின்றது என்று சொல்கிறார். அதிமுக மூன்றாக, நான்காக உடையவில்லை ஒன்றாக இருக்கிறதுஎன்பதற்கு நாமக்கல்லில் நடக்கும் இந்த பொதுக்கூட்டமே சாட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டீர்கள் அவை அனைத்தையும் தோல்வியில்தான் முடிந்தது'' என்றார்.