அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. மார்ச் 28-ம் தேதி இரவு திருவண்ணாமலை நகரில் அதிமுக வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருகிறார் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி. இந்த பிரச்சாரக் கூட்டத்திற்காக, பொதுமக்கள் கூடும் நகரின் பிரதான சாலையில், நீதிமன்றத்தில் தடையாணை வாங்கப்பட்ட இடத்தில் மேடையமைத்துள்ளனர்.
மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக மீதும், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள அதிமுக மீதும் பொதுமக்கள் பல விவகாரங்களில் அதிருப்தியில் உள்ளதால் எடப்பாடி பிரச்சாரம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் கூடுவதேயில்லை. பிரச்சாரத்தை கேட்க பொதுமக்களை அழைத்தாலும் வருவதில்லை என்பதால் கட்சி நிர்வாகிகள் ஆட்களை திரட்ட திண்டாடுகின்றனர்.
திருவண்ணாமலை அதிமுக வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி மீது அரசு ஊழியரை தற்கொலைக்கு தள்ளிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இவர் மீது மக்களும் அதிருப்தியில் உள்ளனர். வாக்கு சேகரிக்க செல்லும் பொதுமக்கள் கூடாததால் அதிமுகவினரே விரக்தியில் உள்ளனர்.
இந்நிலையில் அப்படிப்பட்ட அக்ரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வரும் எடப்பாடி, கூட்டத்துக்கு பொதுமக்களை எப்படியாவது அழைத்து வாருங்கள் என அதிமுக, பாமக, தேமுதிக, பாஜகவுக்கு கணிசமான தொகையை அக்கட்சிகளின் மாவட்ட செயலாளர்களிடம் தந்துள்ளார் வேட்பாளரான அக்ரி.கிருஷ்ணமூர்த்தி.
அப்படி தரப்பட்ட தொகையில் பாஜகவுக்கு ரூ 17 லட்சம் தந்ததாக ஒரு தகவல் கிளம்பி அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தொகுதிக்கு 100 பேர்கூட இல்லாத கட்சிக்கு ஆட்களை அழைத்து வர எப்படி ரூ 17 லட்சம் தரலாம் என கேட்கின்றனர் அதிமுக வட்ட, ஒன்றிய செயலாளர்கள். இங்க ஒரு ஊராட்சிக்கு 10 ஆயிரமும், நகர வார்டுக்கு 20 ஆயிரம் தான் தந்து இருக்காங்க. அவுங்களுக்கு ரூ 17 லட்சமா என கேள்வி எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, ரூ 17 லட்சம் தரலிங்க. தந்ததே வெறும் ரூ 2 லட்சம் தான். மீதி பிறகு தர்றதா சொல்லியிருக்காங்க என்கிறார்கள்.