Skip to main content

'வி.பி.சிங்கின் துணிச்சலை முதல்வரும் வெளிப்படுத்த வேண்டும்'-ராமதாஸ் வலியுறுத்தல்   

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

'The Chief Minister should also show the bravery of VP Singh'- Ramadoss emphasized

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பதினைந்தாம் ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே அவருக்கு செலுத்தும் மரியாதை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவின்  முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பதினைந்தாம் ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. இது சமூகநீதிக் காவலருக்கு செய்யப்படும் மிகப்பெரிய மரியாதை ஆகும். இது வரவேற்கத்தக்கது.

 

அதேநேரத்தில், வி.பி.சிங் அவர்களின் கனவான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது  தான் அவருக்கு தமிழக அரசு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும். வி.பி.சிங் அவர்கள்  பிரதமர் பதவியில் இருந்த போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பெரிய அளவில் எழுப்பப்படவில்லை. எனினும், அவரது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தேவை எழுந்த போது, அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2006 & ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில்  நான் வலியுறுத்தியதன் பயனாக, அதே ஆண்டில் அதற்கான சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி 27% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. அக்கோரிக்கையை வி.பி.சிங் ஆதரித்தார்.

 

2007  ஆம் ஆண்டில் கடுமையான உடல்நலக் குறைவால் வி.பி.சிங் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரகக் குறைபாட்டுக்காக ஒருநாள் விட்டு ஒருநாள் குருதி சுத்திகரிப்பு செய்ய வேண்டியிருந்தது. அத்தகைய சூழலிலும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொண்ட வி.பி.சிங், பிரண்ட் லைன் ஆங்கில இதழுக்கு  அளித்த நேர்காணலில்,‘‘ மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் நான் 27% இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது சாதிவாரி கணக்கெடுப்புக் குறித்து உச்சநீதிமன்றம் வினா எழுப்பவில்லை. ஆனால், இப்போது வினா எழுப்பும் நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம். அதை ஓராண்டுக்குள் செய்யவேண்டும்’’ என்று வலியுறுத்தினார். அதை தேசிய அளவில் செயல்படுத்த வாய்ப்பற்ற நிலையில், மாநில அளவில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர் செய்ய வேண்டும்.

 

இந்தியாவின் சமூகநீதிக் காவலர் என்று வி.பி.சிங் போற்றப்படுவதற்கு காரணம் மிகக் கடுமையான அரசியல் எதிர்ப்புகளையும் மீறி மண்டல் ஆணையப் பரிந்துரைகளை செயல்படுத்தியது தான். அதனால்,  அவர் ஆட்சியை இழந்தார்; அதன்பின் வந்த தேர்தல்களில் உயர்சாதி வாக்குவங்கியை இழந்தார்; பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயமும் அவரை முழுமையாக ஆதரிக்கவில்லை. அதனால், அவரது அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்தது. ஆனாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

 

‘‘மண்டல் ஆணைய அறிக்கையை செயல்படுத்துவதற்கு முன்பாக நான் செய்த அனைத்து செயல்களும் சிறப்பானவை என்று பாராட்டப்பட்டன. மண்டல் அறிக்கையை செயல்படுத்திய பிறகு நான் செய்த ஒவ்வொன்றும் நாட்டிற்கு இழைக்கப்பட்ட தீமையாக பார்க்கப்பட்டன. இந்த ஆட்டத்தில் எனது கால் உடைந்தாலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற கோலை (நிளிகிலி) அடித்து விட்டேன். அந்த விஷயத்தில் மகிழ்ச்சி. எந்த ஒரு பொருளுக்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையை நீங்கள்  செலுத்தி தான் ஆக வேண்டும். ஒரு செயலை செய்துவிட்டு, அதற்கு இப்படி ஒரு விலை கொடுக்க வேண்டியதாகிவிட்டதே என வருத்தப்படக் கூடாது. நான் கொடுத்த விலை மண்டல் ஆணையத்தின் அறிக்கையை செயல்படுத்தியதற்கானது ஆகும்’’ என்று கூறி தமது அரசியல் துணிச்சலை வி.பி.சிங் வெளிப்படுத்தினார்.

 

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு இருந்த அரசியல் துணிச்சல் இப்போது தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு ஆகும். 27 விழுக்காடு  இட ஒதுக்கீட்டை வி.பி.சிங் செயல்படுத்திய போது அவருக்கு அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால், இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எந்த எதிர்ப்பும் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் கட்சிகள் தமிழக அரசியலில் துடைத்து எறியப்படும் என்பதால் எவரும் எதிர்க்க மாட்டார்கள்.  ஓபிசி மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு கொடுத்து சமூக நீதி வழங்குவதற்கு வி.பி.சிங்கிற்கு எதிராக இருந்த சூழல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி சமுகநீதி வழங்குவதில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும், அது குறித்து பேசவும் மு.க.ஸ்டாலின் அஞ்சுவது ஏன்? எனத் தெரியவில்லை.

 

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டாலும் அதை தாங்கிக் கொண்டு சமூக நீதியை செயல்படுத்துவது தான் சமூகநீதி அரசியல் தலைவர்களுக்கு அழகு. ஆனால், எந்த இழப்பும், எந்த எதிர்ப்பும் இல்லாமல், நற்பெயரைப் பெற்றுக் கொடுத்து, வரலாற்றில் இடமளிக்கக் கூடிய சாதிவாரி  மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசின் சார்பில் நடத்த அஞ்சுவது அழகல்ல. எனவே, அனைத்து அச்சம் மற்றும் தயக்கங்களை தகர்த்தெறிந்து தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு  நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை வி.பி.சிங் அவர்களின் சிலைத் திறப்பு விழாவில் வெளியிடுவதன் மூலம் வி.பி.சிங் அவர்களுக்கு உண்மையான மரியாதையை மு.க.ஸ்டாலின் அவர்கள் செலுத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கரும்புக்கான கொள்முதல் விலை போதுமானதல்ல'-ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
'Procurement price for sugarcane is not sufficient'-pmk Ramadoss

கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3150 போதுமானதல்ல: மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.5000 வழங்க முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியா முழுவதும் 2024-25ஆம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு 3,400 ரூபாயும், 9.50% அல்லது அதற்கும் குறைவான திறன் கொண்ட கரும்புக்கு  3150 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழக கரும்புகளுக்கு அதிகபட்ச சர்க்கரைத் திறன் 9.50% தான் இருக்கும் என்பதால், அவற்றுக்கு  ரூ.3150 மட்டும் தான் கிடைக்கும். கரும்புக்கு இந்த விலை போதுமானதல்ல.

தமிழகத்தில் விளைவிக்கப்படும் கரும்புகளுக்கு கடந்த ஆண்டில் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.2,919 வழங்கப்பட்டது. இப்போது ரூ.231 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் 8% மட்டுமே உயர்வு ஆகும். இந்த கொள்முதல் விலையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.3500-க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதை விட குறைவாக கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை.

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்கும் முறையை ஐந்தாண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், பயிர்களின் உற்பத்திச் செலவை கணக்கிடுவதில் நிலத்திற்கான குத்தகைத் தொகை உள்ளிட்ட பல செலவுகள் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை.  மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருப்பதற்கு இதுதான் முக்கியக் காரணம் ஆகும். இந்த சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காகத்தான் நிலத்தின் குத்தகைத் தொகை உள்ளிட்ட செலவுகளையும் உற்பத்திச் செலவுடன் சேர்க்க வேண்டும்; அதை உறுதி செய்ய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உழவர்கள் தயாராகி வருகின்றனர். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் தான் கொள்முதல் விலை சிக்கலுக்கு தீர்வு ஏற்படும்.

தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்பு உற்பத்திக்கு ரூ.3500 செலவாகிறது எனும் போது 50% லாபமாக ரூ.1750 சேர்த்து  டன்னுக்கு ரூ.5250 கொள்முதல் விலை வழங்க வேண்டும். குறைந்தது டன்னுக்கு ரூ.5000 ஆவது வழங்க வேண்டும். மத்திய அரசு அதன் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4000 அறிவிக்க வேண்டும். தமிழக அரசு அதன் பங்குக்கு சர்க்கரை ஆலைகள் மூலம் ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என்று அறிவித்து உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

''அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை'' - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
"We don't want to celebrate it as a festival" - Chief Minister's speech in the meeting

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத் தொடருக்கான கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் கலைஞர் நினைவிடம் திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவரது உரையில், ''நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞரின் நினைவகம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரின் நினைவிடம் மட்டுமல்லாது அவரை உருவாக்கிய நம் தாய் தமிழ்நாட்டின் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணாவின் நினைவகமும், கலைஞரின் நினைவகமும் புதுப்பிக்கப்பட்டு வருகிற பிப்.26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதற்காக நான் இதை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன் என்று சொன்னால், இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எல்லாம் அடிக்கவில்லை.அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. ஆகவே இதை நிகழ்ச்சியாகவே நடத்த விரும்புகிறோம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லா கட்சிகளுடைய உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மூலமாக அழைப்பு விடுத்து இதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.