Skip to main content

அத்துமீறிய ஆளுங்கட்சியினர்... அதிமுக மீது கோபமான தினகரன்... வெளிவந்த காரணம்!

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

கரோனா வைரஸ் தொற்று அபாயத்தால், வாழ்வாதாரம் முடங்கியிருக்கும் நிலையில், இருக்கும் தமிழக மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஏப். 2) ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் மற்றும் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருள்களும் விலையில்லாமல் வழங்கும் பணிகள் தொடங்கின. அதோடு கரோனா உதவித்தொகை வழங்குவதில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதாக புகார் எழுந்துள்ளது.

 

ammk



இந்த நிலையில், ஆளுங்கட்சியினர் தலையிடுவது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கரோனா பெருந்தொற்று நோயைத் தடுப்பதற்கான ஊரடங்கினால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்காக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.1,000 உதவித்தொகைக்கான டோக்கனை தஞ்சாவூரில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் வழங்கியபோது, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுற்றிவளைத்து பிடித்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. ஆளும் கட்சியினரின் இந்த செயல், கரோனா அச்சத்தால் பெரும் இழப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு செய்யும் துரோகமாக அமைந்துவிடும். இதன் மூலம் ஆட்சியாளர்கள் அரசியல் ஆதாயம் தேட முனைவது சரியானதல்ல. 

இந்நிலையில் உதவித்தொகை அவரவர் வீடுகளில் நேரடியாக பணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருப்பது ஆளுங்கட்சியினரின் அத்துமீறலை இன்னும் அதிகப்படுத்திவிடுமோ என்ற சந்தேகத்தை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, ஆளுங்கட்சியினரின் தலையீடு இல்லாமல், அரசு ஊழியர்களை வைத்து தகுதியுள்ள ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் முறையாக உதவித்தொகையை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்