கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பல்வேறு ஆச்சரியமான சம்பவங்கள் நடைபெற்றன. ஆட்சியில் இருந்த ஒரு கட்சி மீண்டும் தொடர்ச்சியாக ஆட்சியில் அமர்ந்தில்லை என்ற சாதனையை கடந்த தேர்தலில் அதிமுக முறியடித்தது. 30 ஆண்டுகளுக்கு மேலாக திமுக, அதிமுக என மாறி மாறி கட்சிகள் ஆட்சி செய்துவந்த நிலை அந்த தேர்தலில் மாறி அதிமுக தன்னுடைய ஆட்சியை தொடர்ந்தது. பல வேட்பாளர்கள் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். குறிப்பாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அந்த சம்பவத்தின் முழு விவரத்தை காணலாம்.
ராதாபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் இன்பதுரை, திமுக சார்பில் அப்பாவு ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தல் முடிவுகளில் இன்பதுரை 69,590 வாக்குகளை பெற்றார். அப்பாவு 69541 வாக்குகளை பெற்றார். 49 வாக்குகள் வித்தியாசத்தில், இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவத்தது. இந்நிலையில் 203 தபால் ஓட்டுகளை செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்ததை எதிர்த்த அப்பாவு, அந்த வாக்குகளை எண்ண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், இதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. அதை மீறி தர்ணாவில் ஈடுபட்ட அப்பாவு, காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினரால் வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து இன்பதுரை வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 203 தபால் ஓட்டுக்களை எண்ண, வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 19, 20, 21 சுற்றுகளின் வாக்கு பதிவு எந்திரங்களின் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வாக்குகள் விரைவில் எண்ணப்படும் பட்சத்தில் ஒருவேளை இன்பதுரையைவிட, அப்பாவு மொத்த வாக்குகளில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.