தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, பழனிசெட்டிபட்டியில் கனிமொழி எம்.பி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், “இங்கு துணை முதல்வர் எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. சென்னையில் ஒருநாள் அம்மையார் சமாதிகிட்ட தியானம் செய்தார்; தர்ம யுத்தம் நடத்தினார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்குன்னு சென்னாரு. அப்ப, பழனிசாமி கூப்பிட்டு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக சொன்னவுடன் அதை மறந்துவிட்டார். திமுக ஆட்சி அமைத்தவுடன், ஜெயலலிதா மரணத்திற்கு முறையாக விசாரணை நடத்தப்படும். யார், யார் தலையீடு இருந்தாலும் தண்டனை பெற்றுத்தரப்படும்.
மக்களவையில் குடியுரிமைச் சட்டம் மற்றும் விவசாய சட்ட மசோதாக்களை ஆதரித்து, மூன்று மாதத்திற்கு முன்னாடி உங்க எம்.பி.தான் ஓட்டு போட்டாங்க. ஆனா, இப்ப தேர்தல் வந்ததால் எதிர்ப்பதாக அறிவிக்கிறார்கள். கடந்த பத்து வருடத்துல யாருக்காவது வேலை கிடைச்சதா, இல்ல. திமுக தலைவர் தலைமையில் ஆட்சி அமைந்ததும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும், வேலைவாய்ப்புகள் கிடைக்கும். காலியாக இருக்கக் கூடிய மூன்று லட்சத்தி எண்பதாயிரம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் கேட்கின்ற கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்றால் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.
நீங்கள் படக்கூடிய கஷ்டங்களை எல்லாம் உணர்ந்து ஸ்டாலின், ரூ. 1,000 வழங்குவேன் என்றார். ஆட்சி அமைந்ததும், டவுன் பஸ்ஸில் பெண்கள் யாரும் டிக்கெட் எடுக்க வேண்டாம், இலவசமாக போயிட்டு வாங்க. 100 நாள் வேலை கொடுக்கப்படுவது கிடையாது. அது 150 நாளாக பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். ஊதியம் 300 ஆக உயர்த்தப்படும். மத்திய அரசு கொண்டுவரும் கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறைக்கப்படும். இந்தத் தொகுதியில் ஓ.பி.எஸ். எந்த திட்டங்களையும் கொண்டுவரவில்லை. சங்கராபுரம் அருகே சிட்கோ வந்ததா? இல்ல. போடி பகுதியில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை வந்துச்சா? இல்ல. இங்கு 30 ஆயிரம் பேருக்கு வேலை வாங்கித் தரணும், ஆனா வேலை பேயிருச்சு.
அரவக்குறிச்சியில பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் பண்ணும்போது, ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’னு சொல்றாரு. அண்ணாமலை என்றால் அவருக்கு ரஜினி என்ற நினைப்பு போல. செந்தில் பாலஜிய அடிச்சிருவேன்னு சொல்றாரு. செந்தில் பாலாஜி மேல் கைவச்சிப் பாரு தம்பி. திமுக உடன்பிறப்புகளை யாரும் மிரட்ட முடியாது; இது தமிழ்நாடு. இங்கு வச்சுக்க வேண்டாம். எங்கே, யார், எதைப் பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும். நா அடக்கம் வேண்டும்.
திமுக ஆட்சி வந்ததும் முதியோர் உதவித் தொகை ரூ. 1,500 உயர்த்தி வழங்கப்படும். போடியில் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். மாம்பழக் கூழ் தொழிற்சாலை கொண்டு வரப்படும். நான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, ‘இறகு பந்து இன்டோர் ஸ்டேடியம்’ கொண்டு வந்துள்ளேன். அதுவெல்லாம் மோடிக்குப் பிடிக்காது. இப்ப அந்த நிதியை எல்லாம் நிறுத்திவிட்டார். கரோனா நிவாரண நிதி ஒவ்வொருவருக்கும் 5000 ரூபாய் கொடுக்கணும். ஆனா, தற்போது 1,000 ரூபாய் அரசு கொடுத்துள்ளது. திமுக அரசு அமைந்ததும், கலைஞரின் பிறந்தநாள் அன்று 4,000 ரூபாயாக வழங்கப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார்” என பேசினார்.
அதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டி போடும் திமுக வேட்பாளர்களான மகாராஜன், சரவணகுமார், ராமகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம் செய்தார்.