Skip to main content

திமுகவில் இணையும் அதிமுக மாநில நிர்வாகிகள்..!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

ADMK member going to join in dmk

 

ஆளுங்கட்சியாக திமுக வந்த பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில், திமுக பலவீனமான உள்ள பகுதியாக கருதப்படும் மேற்கு மாவட்டமான கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கட்சிக் கட்டமைப்பு உடைய தொடங்கிவிட்டது. அதிமுக நிர்வாகிகள் பலரும்  திமுகவில் இணையும் சூழல் உருவாகியுள்ளது.

 

அதன் தொடக்கமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடையும் நிகழ்வாக, ஈரோடு மாவட்ட அதிமுக பாதியாக பிளவுபட்டு ஒரு பகுதி திமுகவில் இணைகிறது.

 

ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளராகவும் ‘ஜெ’ பேரவை மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றி, அதிமுக ஆட்சிக் காலத்தில் சிட்கோ வாரியத் தலைவராகவும் இருந்தவர் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த சிந்து ரவிச்சந்திரன். இவர், தற்போது அதிமுகவில் மாநில வர்த்தக அணிச் செயலாளராக கட்சி பொறுப்பில் இருந்தார். இந்த சிந்து ரவிச்சந்திரன்தான் இன்று (25.06.2021) மாலை திமுகவில் இணையவுள்ளார். 

 

அவரோடு அதிமுக முக்கிய நிர்வாகிகளான ஈரோடு மாவட்ட பஞ்சாயத்து சேர்மேன் கந்தசாமி, அவரது மனைவி, இரண்டு ஒன்றியச் செயலாளர்கள், நான்கு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், பத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கத் தலைவர்கள், நகரச் செயலாளர்கள் என மொத்தம் 19 முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைகிறார்கள். இதன் மூலமாக ஈரோடு மாவட்ட அதிமுக கட்சிக் கட்டமைப்பு சிதறியுள்ளது.

 

கொங்கு மண்டலத்தில் பலமாக உள்ள அதிமுக சிதைய தொடங்கியிருப்பது, மொத்தமாக அதிமுக கூடாரம் மேற்கு மண்டலத்தில் பலவீனப்படுகிற சூழல் உருவாகிவிட்டதைக் குறிக்கிறது. இது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுக சீனியர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக வெளிப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்