தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று வாக்குகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை மாவட்டம் வாரியாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர் 5090 இடங்களில் திமுக பெரும்பான்மை இடங்களில் அதிமுகவை விட முன்னணியில் உள்ளது. அதே போல் மாவட்ட கவுன்சிலர் 515 இடங்களில் தற்போதைய நிலவரப்படி திமுக பெரும்பான்மை இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. ஜனவரி 3ஆம் தேதி (இன்று) 1.00 மணி நிலவரப்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலரில் திமுக 269 இடங்களை பெற்று அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னணியில் உள்ளனர். அதே போல் ஒன்றிய கவுன்சிலரில் 2318 இடங்களை பெற்று திமுக முன்னிலையில் உள்ளனர். அதிமுக 239 மாவட்ட கவுன்சிலர் மற்றும் 2181 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாமக 14, தேமுதிக 4, பிஜேபி 6 மற்றும் இதர கட்சிகள் மாவட்ட கவுன்சிலரில் தற்போது வரை வெற்றி பெற்றுள்ளனர். அதே போல் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 11, மதிமுக 2, இந்திய கம்யூனிஸ்ட் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 ஆகிய இடங்களில் தற்போது வரை மாவட்ட கவுன்சிலரில் வெற்றி பெற்றுள்ளனர். ஒன்றிய கவுன்சிலரில் அதிமுக கூட்டணியில் பாமக 141, தேமுதிக 90, பிஜேபி 81, இதர கட்சிகள் 6 இடங்களிலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 121, மதிமுக 15, விசிக 5, இந்திய கம்யூனிஸ்ட் 71, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 21 ஆகிய இடங்களிலும் தற்போது வரை வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போதுமான வெற்றி பெறவில்லை என்று திமுக மற்றும் அதிமுக தலைமைகள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட இடங்களில் உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக மற்றும் திமுக கட்சியினர் சரியாக களப்பணியில் ஈடுபடவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் அதிமுகவில் சொந்த கட்சியினர் செல்வாக்கு இருக்கும் இடத்தில் கூட்டணி கட்சிக்கு அந்த இடங்களை ஒதுக்கியதால் யாரும் வேலை பார்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சொந்த கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி பூசல் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், எடப்பாடி ஆதரவாளர்கள் என்று இன்னும் கட்சிக்குள் நிலவி வருவதால் அதிமுக தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.