கடந்த மாதம் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் கரோனா தொற்று ஏற்பட்டது பற்றி செய்திகள் பரவியது. அப்போது மாதவரம் பால் பண்ணையை மூடி, சுகாதார ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். ஆனால், திடீரென்று மூடினால் தங்கள் குளறுபடிகள் எல்லாம் வெளிப்பட்டு விடும் என்று நினைத்து ஆவின் அதிகாரிகள் வாய்மூடி அமைதி காத்தனர்.
இந்த நிலையில் இப்போது ஆவின் நிறுவன இணை நிர்வாக இயக்குநரான மணிவண்ணனும் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். இவர், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், காக்களூர் உள்ளிட்ட ஆவின் பண்ணைகளுக்கும், நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்துக்கும் அடிக்கடி வந்துபோகிறவர் என்பதால் யார் யாருக்கு இவர் மூலம் தொற்று பரவியதோ என்கிற அச்சத்தில் ஒட்டுமொத்த ஆவினும் அதிர்ந்துபோயிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்போதே 100-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்குத் தொற்று பரவியிருக்கும் நிலையில், டேங்கர் லாரிகள் மூலம் பால் கொண்டு செல்பவர்களாலும் கரோனாவின் பரவல் கடுமையாகலாம் என்கிறார்கள்.