கோவை குறிச்சி பகுதியில் தமிழக பாஜக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். விழாவில் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி மற்றும் செயற்கைக்கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் பேசிய அண்ணாமலை, “ஒவ்வொரு மெஷினும் 10 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும். இது இன்று 95 பேருக்கு வழங்கப்படுகிறது” எனக் கூறியிருந்தார். ஆனால் ஆன்லைன் விற்பனைத் தளங்களில் இதன் விலை வெறும் 345 ரூபாய் என இருந்ததையும் அண்ணாமலையின் பேச்சையும் இணைத்து இணையவாசிகள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்நிலையில், இதற்கு அண்ணாமலை ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். அதில், காது கேட்கும் கருவி 10000 ரூபாய் மதிப்பிலானது என்று அரிமா சங்க இயக்குநர் தெரிவித்ததன் அடிப்படையில்தான் பொருளின் விலை மேடையில் அறிவிக்கப்பட்டது எனவும், பின் விசாரித்ததில் காது கேட்கும் கருவிகள் விலை ரூபாய் 350 தான் என்ற உண்மை தெரியவந்தது எனவும் கூறியுள்ளார். மேலும், “அடுத்த 72 மணி நேரத்திற்குள், 16 குழந்தைகள் உட்பட நேற்று காது கேட்கும் கருவிகளை பெற்றவர் அனைவருக்கும் 10,000 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவிகளை தமிழக பாஜக வழங்கும்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள செந்தில் பாலாஜி, “சத்ரபதி சிவாஜி 1967ல் சென்னை வந்தார்; 37 வயதுக்குள் படித்தது 20000 புத்தகம்; கணுக்கால் தண்ணீரில் டைட்டானிக் ட்ராமா; 9 வருட சர்வீஸில் 2 லட்சம் கேஸ்; 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச்; இன்று, ரூ.345/- மெஷின் 10,000 ரூபாய். ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே.. காதுகள் பாவமில்லையா' எனப் பதிவிட்டுள்ளார்.