நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும், அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்காமல் தனித்து நிற்க முடிவு செய்துள்ளது. இதனிடையே, டெல்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட விரும்புவதாகவும், 1 தொகுதியை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க உள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சந்தீப் பதக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “டெல்லியில் சட்டசபை மற்றும் மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடங்கள் கூட இல்லை. அந்த வகையில், தகுதி அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் ஒரு இடத்திற்கு கூடத் தகுதி இல்லை. ஆனால், கூட்டணி தர்மத்தை மனதில் வைத்து அவர்களுக்கு டெல்லியில் ஒரு இடத்தை வழங்குகிறோம். காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், ஆம் ஆத்மி கட்சி 6 இடங்களிலும் போட்டியிட முன்மொழிகிறோம்” என்று கூறினார்.