
கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதான ஸ்ரீநந்தா என்ற இளம்பெண். இவர், ‘அனோரெக்ஸியா நெர்வோசா’ என்ற உணவு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், எடை குறைவாக இருந்தாலும் தங்களை அதிக எடை கொண்டவர்களாக உணர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்க தீவிர நடவடிக்கையில் மேற்கொள்வர்.
இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீநந்தா, ஆன்லைன் மூலம் எடை குறைப்புத் திட்டங்களை பின்பற்றி 6 மாதங்களாக உணவு உண்பதை வெகுவாக குறைத்துள்ளார். தனது பெற்றோர் கொடுத்த உணவை மறைத்து, வெந்நீரை மட்டுமே குடித்து வந்துள்ளார். இதில் ஸ்ரீநந்தாவில் உடல் மெலிந்ததால், சுமார் 5 மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் சரியாக சாப்பிடுவதை உறுதி செய்யுமாறு குடும்பத்தினரிடம் அறிவுரை கூறியுள்ளனர். எனினும், அவர் உணவு எதையும் சாப்பிடாமல் வந்துள்ளார்.
இதையடுத்து, 2 மாதங்களுக்கு முன்பு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மீண்டும் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு மற்றும் மனநல ஆதரவு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து கொண்டே வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, ஸ்ரீநந்தாவுக்கு ரத்த சர்க்கரை அளவு கணிசமாக குறைந்து கடுமையான சுவாச கோளாறு ஏற்பட்டது. இதனால், உடனடியாக அவர் தலசேரி கூட்டுறவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் 24 கிலோ எடை கூட இல்லாமல், படுத்த படுக்கையாக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவருக்கு சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்துள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீநந்தா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.