உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மக்யாலி கிராமத்தைச் சேர்ந்த நசீம் மாலிக்(26) என்ற இளைஞர் வளைகுடா நாட்டில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தனக்குத் திருமணம் செய்வது குறித்து சதாம் என்ற தரகரின் மூலம் பெண் பார்க்கச் சொல்லியுள்ளார். அதன்பேரில் தரகரும் நர்கீஸ்(23) என்ற பெண்ணைப் பார்த்து இருவருக்கும் திருமணமும் செய்து வைத்துள்ளார்.
திருமணமாகி இருவருக்கும் 5 மாதங்கள் ஆன நிலையில், நசீம் மாலிக்கிற்கு தனது மனைவி நர்கீஸ் மீது அதிருப்தி இருந்துள்ளதாகத் தெரிகிறது. அதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இப்படி அடிக்கடி சண்டை வருவதால் இருவரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்த நிலையில்தான் இப்படிப்பட்டவரை தனக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டதாக இருவரும் தரகர் சதாமை சந்தித்து நியாயம் கேட்கச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் வருவதைத் தெரிந்துகொண்ட தரகர் சதாம் தலைமறைவான நிலையில், சதாமின் வீட்டிற்கு வந்த தம்பதி அவரது வீட்டு வாசலிலேயே சண்டை போட்டுக்கொண்டுள்ளனர்.
இதனைப் பார்த்த சதாம் வீட்டின் பக்கத்து வீட்டுக்கார இளைஞர், தம்பதியை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் நசீம் மாலிக் சமாதானம் செய்ய வந்த இளைஞரை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதனால் அந்த இளைஞர் கத்திக் கூச்சலிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நசீமும், நர்கீஸும் அங்கிருந்து மோட்டார் பைக்கில் கிளம்பிச் சென்றனர். அப்போது நடு வழியில் பைக்கை நிறுத்திய நசீம் தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த நர்கீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து நசீம் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நசீமால் சுடப்பட்ட இளைஞரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.