நாளை முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் மத்திய அரசின் இந்த முடிவு குறித்து மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.
நாளை முதல் நாடு முழுவதும் 15 ரயில்கள் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் என்ற ரயில்வே துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "மாநிலங்களுக்கு இடையே பயணிகள் ரயில் சேவையை மிகுந்த எச்சரிக்கையுடன் தொடங்கும் மத்திய அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதேபோன்ற செயல்பாட்டைச் சாலைப் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்தைத் தொடங்குவதிலும் பின்பற்ற வேண்டும்.
பொருளாதார, வர்த்தகச் செயல்பாடுகள் தீவிரமாகத் தொடங்குவதற்கு ஒரே வழிச் சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, பயணிகள், சரக்குப் போக்குவரத்தைத் தொடங்கினால் மட்டும்தான்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு அப்படியே நேர்மாறாக காங்கிரஸ் கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ராதிகா கேரா, மத்திய அரசின் இந்த முடிவை விமர்சித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "கரோனா வைரஸுடன் வாழவேண்டும் என்பதை நாம் கற்றுக்கொண்டிருந்தாலும், கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது என்பதையும் கவனிப்பது அவசியம்.
லாக்டவுன் தொடங்கியதிலிருந்து இன்றுதான் மிகப்பெரிய அளவில் 4,213 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகள் செய்த தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்பது அவசியம். இயல்பு நிலைக்குத் திரும்பும் முன் கரோனா வளைகோடு சமநிலைக்கு வருவதற்காகக் காத்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.