புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நேற்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் பதட்டம் நிலவியது. தமிழகத்தை சேர்ந்த இந்திய வான்படை பைலட் அபிநந்தன் பாகிஸ்தானில் ராணுவத்தால் பிடிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாகிஸ்தான் உடனான இந்த விவகாரத்தை வைத்து வரும் மக்களவை தேர்தலில் பாஜக 22 இடங்களில் வெற்றி பெரும் என தெரிவித்தார். பாஜக வுக்காக கர்நாடகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள எடியூரப்பா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "பிரதமர் நரேந்திர மோடி, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்குவோம் என கூறினார். இது நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமரின் இந்த கருத்துக்கு இளைஞர்கள் நடனமாடி கொண்டாடுகிறார்கள். இதன் விளைவாக கர்நாடகாவில் உள்ள 28 இடங்களில் இப்போது 22 க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளை வென்றெடுப்பது பாஜக வுக்கு எளிது" என கூறினார். அவரின் இந்த பேச்சு மக்களிடம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.