மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கும், அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆளுநர் ஜகதீப் தங்கர், மேற்கு வங்க சட்டமன்றம் கூடுவதை நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக ஆளுநரின் அனுமதியின்றி மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சட்டமன்றம் கூட வேண்டுமானால் ஆளுநரின் அனுமதியோடு, அவரது உரையோடு மட்டுமே கூட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆளுநரின் இந்த உத்தரவு, அரசியலமைப்பு ரீதியிலான நெருக்கடிக்கும் வழி வகுக்கும் எனக் கருதப்படுகிறது.
மேற்கு வங்க ஆளுநரோ, மாநில அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே சட்டமன்றத்தை முடக்கியதாகக் கூறியுள்ளார். ஆனால் அம்மாநில ஆளுங்கட்சியான திரிணாமூல் காங்கிரஸோ, ஆளுநரின் முடிவை விமர்சித்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினையும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவையும் தொடர்பு கொண்ட மம்தா, எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து எதிர்க்கட்சி முதல்வர்களின் கூட்டம் விரைவில் டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்சூழலில் மேற்கு வங்க ஆளுநர் மம்தாவை ஆளுநர் ஜகதீப் தங்கர், வரும் வாரத்தில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் எழுப்பப்பட்ட பிரச்சனைகளின் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், அது அரசியலமைப்பு ரீதியிலான முட்டுக்கட்டைக்கு வழிவகுக்கும் என கடிதத்தில் தெரிவித்துள்ள ஜகதீப் தங்கர், அரசியலமைப்பு ரீதியிலான முட்டுக்கட்டையைத் தவிர்ப்பதாக நாம் இருவருமே பதவி பிரமாணத்தின்போது உறுதிமொழி எடுத்தோம் எனவும் மம்தாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.