கேரளாவை சேர்ந்த வித்யாபாலன் தமிழ் படங்களில் நடிக்க முயன்று முடியாமல் போனதால் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு அவர் முன்னணி நடிகையானார். அதைத்தொடர்ந்து பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பெண்களை சமைக்க சொல்வது தவறான வழிமுறைகளில் ஒன்று என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, "எனக்கு சமைக்க வராது. சமையல் கற்றுக்கொள்ள ஆசையும் இல்லை. 2012-ல் தயாரிப்பாளர் சித்தார்த் ராய்கபூரை திருமணம் செய்தபோது இனிமேலாவது சமையல் கற்றுக்கொள் என்று எனது தாயார் கூறினார். ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்? இப்போது நிறைய சம்பாதிக்கிறேன். வேண்டுமானால் சமையல்காரர் வைத்துக்கொள்கிறேன் என்றேன். அதுவும் இல்லையென்றால் வெளியே போய் சாப்பிட்டுக் கொள்கிறோம். எனக்கு இந்த சமையல் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இல்லை என்றும் பதில் சொன்னேன். சமையல் கற்றுக்கொள் என்று சொல்வதை விட சமையல் தெரிந்தவரை திருமணம் செய்து கொள் என்று ஏன் சொல்ல மாட்டேன் என்கிறாய் என்று அம்மாவிடம் திருப்பி கேட்டேன்.
இவர்தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கும் வழக்கத்தை ஏற்க மாட்டேன். சமையல் பெண்கள்தான் செய்ய வேண்டும் என்பதை பெற்றோரே நம்மீது திணித்துக்கொண்டு வருகிறார்கள். இதை நான் எதிர்க்கிறேன். யாருக்கு ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் செய்யலாம். ஆர்வம் இல்லாதவர்களை செய்துதான் ஆகவேண்டும் என்று பலவந்தப்படுத்துவது எனக்கு பிடிக்காது. எனது எண்ணத்தை கணவர் நன்றாக புரிந்து கொண்டார். அதனால் எனக்கு சமையல் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை" இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.