உத்தரப்பிரதேச அரசு, தங்கள் மாநிலத்தில் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வருவதற்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டத்தைக் கொண்டுவரவுள்ளது. இந்த மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தின் வரைவு மசோதா தற்போது பொதுமக்களின் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட வரைவில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசின் நலத்திட்ட பயன்களைப் பெற முடியாது. குடும்பத்தில் நான்கு பேர்களுக்கு மட்டுமே ரேஷன் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது எனவும் சட்ட வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இரண்டு குழந்தைகள் கொள்கையைப் பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கு, கூடுதலாக இரண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும்; பிளாட் அல்லது வீடு வாங்க மானியம் அளிக்கப்படும்; தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் தொகையில் மூன்று சதவீதம் அதிகரிப்பு செய்யப்படும் என்பன போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்று அரசு வேலையில் இல்லாமால் இரண்டு குழந்தைகள் கொள்கையைப் பின்பற்றுபவர்களுக்கும் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் ஒரேயொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கும், அரசு வேலையில் இல்லாதவர்களுக்கும் அந்த சட்ட வரைவில் சலுகைகள் அறிவிப்பட்டுள்ளன. பெற்றோர்கள் ஒரே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டால் அந்தக் குழந்தைக்கு 20 வயதாகும்வரை காப்பீடும், இலவச மருத்துவமும் வழங்கப்படும் எனவும், குழந்தைக்கு எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவன சேர்க்கைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஒரேயொரு குழந்தையைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்ட ஆணையத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் எழுதியுள்ள கடிதத்தில், இரண்டு குழந்தைகள் விதிமுறையை ஊக்குவித்து, மக்கள் தொகையை நிலைப்படுத்தும் குறிக்கோளை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஆதரிப்பதாகவும், அதேநேரத்தில் ஒரேயொரு குழந்தையைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு சலுகை வழங்குவது குறிக்கோளைத் தாண்டிய வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பது, காலப்போக்கில் மக்கள் தொகை சுருக்கத்திற்கு வழிவகுத்துவிடும் என்றும். இது எதிர்மறையான சமூக, பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.