மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், 22ஆம் தேதி இரவோடு இரவாக பேச்சு முடிந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது.
இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று அதிர்ச்சியூட்டினார். இந்நிலையில் ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் மனு தாக்கல் செய்தன. இதில் இன்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், மஹாராஷ்டிராவில் நாளை (27-11-19) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அறிவித்தது.
இந்த சூழலில் அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து தேவேந்திர பட்னாவிஸும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தலில் மகாயூதிக்கு பெரும்பான்மை கிடைத்தது. பாஜகவுக்கு அதிகபட்சமாக 105 இடங்கள் கிடைத்தன. நாங்கள் சிவசேனாவுடன் இணைந்து போட்டியிட்டோம், ஆனால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் 70 சதவீத இடங்களை பாஜக வென்றது. மேலும் தங்களுக்கு யார் முதல்வர் பதவி வழங்கினாலும் அவர்களுடன் கூட்டணி அமைப்போம் என சிவசேனா கூறியது. இருப்பினும் நாங்கள் அவர்களுக்காக காத்திருந்தோம். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை.
தங்களது வீட்டை விட்டு வெளியே சென்று யாரையும் சந்திக்காத சிவசேனாவினர் ஆட்சியமைப்பதற்காக ஒவ்வொருவர் வீடாக சென்று என்சிபி மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தனர். அவர்கள் ஆட்சியமைத்தாலும் கருத்து வேறுபாடு இருப்பதால் அது மிகவும் நிலையற்ற அரசாங்கமாகவே இருக்கும். ஆனால் பாஜக ஒரு திறமையான எதிர் கட்சியாக செயல்பட்டு மக்களின் குரலை உயர்த்த முயற்சிக்கும். அதிகாரத்திற்கான பசியால் இப்போது சிவசேனா தலைவர்கள் சோனியா காந்தியுடன் கூட்டணி வைக்க கூட தயாராக உள்ளனர். நாங்கள் ஒருபோதும் குதிரை பேரத்தில் ஈடுபட மாட்டோம். எந்த எம்.எல்.ஏ.வையும் பிரிக்க முயற்சிக்க மாட்டோம் என்று முடிவு செய்திருக்கிறோம். மேலும் அஜித் பவார் தனிப்பட்ட காரணங்களாலேயே ராஜினாமா செய்ததாக என்னிடம் கூறினார்" என்றார்.