ரஃபேல் போர்விமானங்களை வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக இடைத்தரகருக்கு ரூ. 9 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாக ஃபிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் தகவல் வௌியிட்டது. இதனையடுத்து ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது உறுதியாகியுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்தது. இதுகுறித்து பிரதமர் நாட்டிற்குப் பதிலளிப்பாரா எனவும் காங்கிரஸ் கேள்வியெழுப்பியது.
அதேநேரத்தில், இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என பாஜக நிராகரித்தது. ஆனாலும் ராகுல் காந்தி, “கர்மா - ஒருவரின் செயல்கள் பதிவாகும் பேரேடு. அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது” என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி மீண்டும் ரஃபேல் விவகாரத்தைக் கையிலெடுத்திருப்பதால், ரஃபேல் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.