ஆறு கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் இறுதிக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. அதனால், அம்மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியையும், அந்த கட்சியின் மூத்த தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வி.கே பாண்டியனை பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில், நேற்று பா.ஜ.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ஒடிசா மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆளலாமா?’ என்று கூறி கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதற்கிடையே, நேற்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பேசியது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும், அந்த வீடியோவை பகிர்ந்து பா.ஜ.கவினர் வி.கே.பாண்டியனை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில், நவீன் பட்நாயக் பேசும்போது அவரின் நடுங்குவதைக் கண்ட வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக்கின் கையை மறைத்து வைத்தார். இதுகுறித்து, பா.ஜ.கவைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஷ்வா சர்மா, ‘நவீன் பட்நாயக்க்கின் கைகளைக்கூட வி.கே.பாண்டியன் தான் கட்டுப்படுத்துகிறார்’ எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்து விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில், ஒடிசா மாநிலம். பரிபாடா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “பல ஆண்டுகளாக, நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவர்கள் என்னைச் சந்திக்கும் போதெல்லாம், அவர்கள் நிச்சயமாக அவரது உடல்நிலை குறித்து விவாதிக்கிறார்கள். நவீன் பட்நாயக், தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். நீண்ட நாட்களாக நவீன் பட்நாயக்குடன் நெருங்கிப் பழகியவர்கள், அவரது உடல்நிலை மோசமடைந்ததற்கு பின்னணியில் சதி இருக்கலாம் என நம்புகின்றனர்.
நவீன் பட்நாயக் என்ற பெயரில் திரைமறைவில் ஒடிசாவில் அதிகாரத்தை அனுபவிக்கும் லாபி தான் அவரது உடல்நலக்குறைவுக்கு காரணமா என்பதை அறிந்து கொள்வது ஒடிசா மக்களின் உரிமை. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஒடிசாவில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால், பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு குழுவை அமைக்கும்” என்று கூறினார்.