விமான எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியைக் குறைக்குமாறு, தமிழ்நாடு உள்ளிட்ட 22 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் எழுதியுள்ளார். விமான எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை 1 சதவீதத்திலிருந்து 4 சதவீதத்திற்குள் மறுசீரமைப்பு செய்யுமாறு அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
விமான எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியைக் குறைப்பது விமான போக்குவரத்துக்கு உத்வேகத்தை அளிக்கும் என தனது கடிதத்தில் கூறியுள்ள ஜோதிராதித்ய சிந்தியா, மதிப்புக்கூட்டு வரியைக் குறைப்பது விமான போக்குவரத்து தொடர்பிலும், பொருளாதார வளர்ச்சியிலும் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
கேரளா மற்றும் தெலங்கானாவில் விமான எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியைக் குறைத்த ஆறு மாதத்தில், அங்கு விமான போக்குவரத்து அதிகரித்திருப்பதையும் ஜோதிராதித்ய சிந்தியா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.