Skip to main content

சிபிஐ காவலில் ப.சிதம்பரம்...இன்றிரவு முதல் விசாரணை தொடங்க சிபிஐ திட்டம்!

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

2007- ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் நேற்றிரவு அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டு சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ப.சிதம்பரத்திடம் 12 கேள்விகளை சிபிஐ எழுப்பியதாகவும், அந்த கேள்விகளில் 6- க்கு மட்டும் ப.சிதம்பரம் பதிலளித்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.

 

 

cbi

 


இதனையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று மதியம் 03.00 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார். ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான கபில்சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ப.சிதம்பரத்தை  5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ உறுதியாக இருப்பதாக வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை அரைமணி நேரத்திற்கு ஒத்திவைத்தார். இரு தரப்பு வழக்கறிஞர்களும் சுமார் ஒன்றரை மணி நேரம் வாதிட்டனர். அப்போது ப.சிதம்பரமும் தனது வாதத்தை நீதிபதியிடம் முன்வைத்தார்.

 

cbi

 

அதில் எனது வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் ஏற்கனவே சிபிஐயிடம் கொடுக்கப்பட்டதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.மேலும் ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால், ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். ப.சிதம்பரம் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகம் முழுவதும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் (ஆகஸ்ட்- 26 ஆம் தேதி வரை ) நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிபதி அனுமதி வழங்கி அதிரடி உத்தரவு.

 

former union minister p chidambaram 5 days cbi custody delhi rose avenue court order

 

சிபிஐக்கு கிடைத்திருக்கும் ஆவணங்கள் அடிப்படையில் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி வழங்கப்படுள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அந்த உத்தரவில் சிபிஐ காவலில் இருக்கும் ப.சிதம்பரத்தை தினமும் அரை மணி நேரம் குடும்ப உறுப்பினர்கள் சந்திக்கலாம் என்றும், வழக்கறிஞர்களும் சந்திக்க அனுமதி வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் உத்தரவிட்டுள்ளார். சிபிஐ காவல் முடிந்தவுடன் ப.சிதம்பரத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

former union minister p chidambaram 5 days cbi custody delhi rose avenue court order

 

இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ப.சிதம்பரம் சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இன்றிரவு முதல் ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை தொடங்க உள்ளனர். அதேபோல் ப.சிதம்பரத்திற்கு வழங்கப்படும் உணவு குறித்து ப. சிதம்பரம் தரப்பில் நீதிமன்றத்தில் எதுவும் குறிப்பிடாததால், இது குறித்து சிபிஐ அதிகாரிகளே முடிவெடுப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ப.சிதம்பரத்திற்கு தேவையான உடைகள் வெளியில் இருந்து எடுத்து வர நீதிபதி அனுமதி, ப.சிதம்பரத்தின் மாண்பை குறைக்கும் வகையில் சிபிஐ நடந்து கொள்ளக்கூடாது என சிபிஐக்கு நீதிபதி அறிவுறுத்தல்.




 

சார்ந்த செய்திகள்