டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக ரூபாய் 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 50 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு. 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமை மூன்று மாதத்துக்கு கூடுதலாக வழங்கப்படும். ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்.
ஊரடங்கு காலத்தில் ஏழைகள் யாரும் உணவின்றி தவிக்கக் கூடாது என்பதில் அரசு உற்பத்தியாக உள்ளது. பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தரப்படும் ரூபாய் 6 ஆயிரத்தில் ரூபாய் 2 ஆயிரம் முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்கப்படும். 8.69 கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தால் பயனடைவர். 100 நாள் வேலைத் திட்ட ஊழியர்களுக்கான ஊதியம் ரூபாய் 182 லிருந்து ரூபாய் 202 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும் ரூபாய் 20 உயர்வதால் 100 நாட்களுக்கான ஊதியம் ரூபாய் 18,200 லிருந்து ரூபாய் 20,200 ஆக அதிகரிக்கும்.முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும். இந்த உதவித்தொகை இரண்டு தவணைகளாக மூன்று மாதங்களில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்." இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.