நாட்டில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதில் வங்கிகள் இணைப்பு, வீட்டுக்கடன், வாகன கடன், பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும் என்றும், வருமான வரித்துறையில் டிஜிட்டல், ஜிஎஸ்டி வரி குறைக்கும் நடவடிக்கை, ஷாப்பிங் திருவிழா, மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (19/09/2019) செய்தியாளர்களை சந்தித்து, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் வங்கிகள் மூலம் 'கடன் மேளா' கூட்டங்கள் நடைபெறும் என்று அதிரடியாக அறிவித்தார். இந்த கூட்டங்கள் முதற்கட்டமாக செப்டம்பர் 24 முதல் 29 வரையில் 200 மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டமாக அக்டோபர் 10 முதல் 15 தேதிகளுக்கிடையில் அடுத்த 200 மாவட்டங்களிலும் நடக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த கூட்டங்களில் சில்லரை, விவசாய, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்கப்படவுள்ளது. திருவிழா சீசன்களில் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க கடன்கள் வழங்கப்படவுள்ளதால் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் வங்கி வாராக்கடன்களை செயலில் இல்லாத சொத்துக்களாக (NON PERFORMING ASSET- NPA) மார்ச் 31, 2020 வரை அறிவிக்க வேண்டாம் என்று வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.