Skip to main content

வழக்கு தொடர்ந்த வாட்ஸ்அப்: புதிய விதி குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்!

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

 

ravishankar prasad

 

சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி ஒருசாரார் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததுவந்தனர். அதேபோல் ஓடிடி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்துவந்தது. மேலும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு சமூகவலைதளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் கட்டுப்பாடுகளை அறிவித்தது.

 

மேலும், இந்தக் கட்டுப்பாடுகள் மூன்று மாதங்கள் கழித்து அமலுக்கு வருமென்றும் மத்திய அரசு அப்போது தெரிவித்திருந்தது. இந்தநிலையில், புதிய கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் கடந்த 25ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் தற்போதுவரை வாட்சப், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் புதிய கட்டுப்பாடுகளுக்கு இணங்கவில்லை. மேலும், அந்த நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய விதிகள் குறித்து, அமெரிக்காவில் இருக்கும் தங்களது தலைமை அலுவலகத்தின் பதிலுக்காக காத்திருப்பதால், புதிய விதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக முடிவெடுக்க 6 மாதங்கள்வரை  அவகாசம் கேட்டுவருகின்றனர்.

 

ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் வாட்ஸ்அப் நிறுவனம், ஒரு தகவலை முதன்முதலில் குறிப்பிட்ட சமூகவலைதளத்தில் பதிவிட்டவர் யார் என அரசு கேட்டால் சமூகவலைதளம், அந்த நபரைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்த தனது மனுவில் வாட்ஸ்அப், மத்திய அரசின் இந்தப் புதிய விதிமுறை இந்திய அரசியல் சட்டம், தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள தனியுரிமையை மீறும் வகையில் இருப்பதாகவும், வாட்ஸ்அப் செயலியில் தகவல் அனுப்பும் முறை என்க்ரிப்ட் செய்யப்பட்டிருப்பதால், முதன்முதலில் ஒரு செய்தியைப் பதிவிட்டவரைக் கண்டுபிடிக்க, தகவலைப் பெற்றவர்முதல் அனுப்பியவர்வரை அனைவரது என்கிரிப்ஷனும் உடைக்கப்பட வேண்டியதிருக்கும் எனவும் கூறியுள்ளது.

 

இதுகுறித்து நேற்று (26.05.2021) விளக்கமளித்த மத்திய அரசு, குடிமக்களின் தனியுரிமையை மதிப்பதாகவும், அதை மீறுவதற்கான நோக்கம் இல்லை எனவும் தெரிவித்தது. இந்தநிலையில், இன்று மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ்அப் நிறுவனம் எதிர்த்து வழக்கு தொடர்ந்த விதிகுறித்து விளக்கமளித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர், "தனியுரிமையை அரசு முழுமையாக அங்கீகரிக்கிறது, மதிக்கிறது. சாதாரண வாட்ஸ்அப் பயனர்கள் புதிய விதிகளைப் பற்றி பயப்பட ஒன்றுமில்லை. புதிய விதியின் நோக்கமே, (புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள) சில குற்றங்களைச் செய்ய வழிவகுக்கும் செய்திகளை யார் முதலில் பரப்பியது என்பதைக் கண்டறிவதே. புதிய விதிகள், சமூக ஊடகங்களின் துஷ்பிரயோகம் மற்றும் தவறான பயன்பாட்டைத் தடுக்க மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. கேள்வி கேட்கும் உரிமை உள்ளிட்ட விமர்சனங்களை அரசு வரவேற்கிறது. இந்தப் புதிய விதிகள், சாதாரண பயனர்கள் சமூக ஊடகங்களின் துஷ்பிரயோகம் மற்றும் தவறான பயன்பாட்டால் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு ஆதரவை வழங்குகிறது" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.