கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்துள்ள தடை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிராகத் துவங்கிய போராட்டம், மாநிலம் முழுவதும் பரவியதால், ஹிஜாபுக்கு கர்நாடக மாநில அரசு கடந்த பிப்ரவரி 5- ஆம் தேதி தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
கர்நாடக அரசின் உத்தரவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் அனைத்தும் கடந்த மார்ச் 15- ஆம் தேதி அன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஹிஜாப் அணிவது முஸ்லிம் சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல. பள்ளி சீருடை விதிகள் மீறுவது சரியல்ல. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.
கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
அதில், ஹிஜாப் தடைக்கு ஆதரவாக ஒரு நீதிபதியும், ஹிஜாப் தடைக்கு எதிராக ஒரு நீதிபதியும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மாறுபட்ட தீர்ப்பால் ஹிஜாப் வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.