கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் அனந்தபுரா பகுதியில் உள்ள அனந்த பத்மநாப சாமி கோவில் உள்ளது. கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக பபியா என்ற முதலை வசித்து வந்தது.
இந்த முதலைக்கும் ஒரு வரலாறு நெடுங்காலமாக அப்பகுதி மக்களால் பகிரப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்கு ஆங்கிலேய ராணுவ வீரர் வந்தார். அவர் அப்போது அந்த குளத்தில் இருந்த முதலையை சுட்டுக் கொன்றதாகவும் அதன் பின் பபியா தெப்பக்குளத்தில் தோன்றியதாகவும் கூறப்படுகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலவரை கண்டுவிட்டு கட்டாயம் பபியாவை பார்த்தபின் தான் செல்லுவார்களாம். மேலும் கோவிலில் மூலவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட உணவுகளையே தானும் உண்டு வந்தது. கோவில் அர்ச்சகர் தன் கைகளால் முதலைக்கு உணவு கொடுத்த நிகழ்வுகளும் நடந்துள்ளது.
பபியா முதலை கோவிலில் பக்தர்கள் யாரும் இல்லாத போது கோவிலுக்கு வந்து மூலவரை தரிசித்துவிட்டு செல்லும் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இதனை ஒரு நாள் கோவில் அர்ச்சகர் ஒருவர் புகைப்படமாக எடுத்து பதிவிட்டார். இதன் பின் கோவிலில் பபியாவை காண வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானது.
கோவிலுக்குள் வந்த பபியா முன் அர்ச்சகர் ஒருவர் நின்று இருப்பது போலவும் படங்கள் வந்தன. தன் முன் மனிதர் ஒருவர் நின்று இருந்த போதிலும் அவருக்கு எந்த விதமான தீங்கும் செய்யாமல் நகர்ந்து சென்றதும் பெரிதும் பேசப்பட்டது.
2019ம் ஆண்டு கோவிலில் முதலையை காணவில்லை என்றதும் முதலை இறந்துவிட்டதாக தகவல் பரவியது. இதன் பின் முதலை நல்ல படியாக உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் அறிவித்தனர்.
இந்நிலையில் ஞாயிறு இரவு அன்று பபியா முதலை இறந்து விட்டது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பபியா இறந்த பின் முதலையை நல்லடக்கம் செய்யும் வரை கோவில் திறக்கப்படவில்லை. பக்தர்கள் பபியாவிற்கு அஞ்சலி செலுத்த முதலையின் உடலை கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருந்தனர்.
இந்நிலையில் முதலையின் முகத்தின் அருகே நபர் ஒருவர் தன் நெற்றியை வைத்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி அதனை அனைவரும் உபயோகித்தனர். ஆனால் அந்த முதலை பபியா இல்லை என்றும் சிட்டோ என்பவர் இறக்கும் தருவாயில் இருந்த ஒரு முதலைக்கு மருத்துவம் செய்து மீண்டும் முதலையை நலம் பெற செய்தார். அந்த முதலையுடன் அவர் எடுத்த வீடியோ பதிவில் வரும் காட்சியே பபியா என்னும் பெயரில் பகிரப்படும் புகைப்படம் என சமூக வலைதளங்களில் ஆதாரங்களுடன் பலரும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த வீடியோ பதிவு மனிதர்களுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உள்ள அசாதரண உறவுகளை பேசும் வீடியோ. அதில் மனிதனுக்கும் முதலைக்கும் உள்ள உறவை சிட்டோ கூறுவது போல் வீடியோ அமைந்திருக்கும்.