சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி ஒருசாரார் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததுவந்தனர். அதேபோல் ஓடிடி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்துவந்தது. மேலும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு சமூகவலைதளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் புதிய விதிகளை அறிவித்தது. இந்தப் புதிய விதிகளை ஏற்றுக்கொள்வதற்கான அவகாசம் கடந்த 25ஆம் தேதியோடு முடிவடைந்தது. இருப்பினும் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் இன்னும் அந்த விதிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அரசின் ஒரு விதியை எதிர்த்து வாட்ஸ்அப் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதேபோல் பாஜக செய்தித்தொடர்பாளர், காங்கிரஸ் கட்சியைக் குற்றஞ்சாட்டி பதிவிட்ட ஆவணத்தை சந்தேகத்துக்கிடமானது என ட்விட்டர் வகைப்படுத்திய விவகாரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை, ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் சோதனை நடத்தியது.
இந்தநிலையில் ட்விட்டர் நிறுவனம், ட்விட்டரின் இந்தியப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்தும், இந்தியாவில் கருத்து சுதந்திரம் குறித்தும் கவலைப்படுவதாக கூறியுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், "இந்தியாவில் உள்ள எங்கள் பணியாளர்கள் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் குறித்தும், நாங்கள் சேவை செய்யும் நபர்களின் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் நாங்கள் கவலைகொண்டுள்ளோம். உலகளாவிய சேவை விதிமுறைகளை அமல்படுத்தியதற்கான பிரதிபலனாக மிரட்டல் விடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கை தொடர்பாகவும், புதிய தகவல் தொழிற்நுட்ப விதிகளின் (மத்திய அரசின் புதிய விதிகளின்) முக்கியக் கூறுகள் தொடர்பாகவும் நாங்கள் கவலைகொண்டுள்ளோம். கட்டுப்பாடற்ற, திறந்ததன்மையுடைய பொது உரையாடலைத் தடுக்கும் இந்த விதிமுறைகளின் கூறுகளில் மாற்றங்களை முன்வைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமான உரையாடலைத் தொடருவோம். மேலும் ஒரு கூட்டு அணுகுமுறையைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது என்று நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "புதிய விதிகளுக்கு இணங்குவதற்கான நடைமுறை அம்சங்கள் மீதான நிலையான வழிமுறைகளை பொதுமக்களின் ஆலோசனைக்கு வெளியிட மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தைக் கேட்டுக்கொள்கிறோம். ட்விட்டருக்குப் புதிய விதிகளை அமல்படுத்த மூன்று மாதங்கள் அவகாசம் வழங்குவது ஆலோசிக்குமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தைக் கேட்டுக்கொள்கிறோம்" என கூறியுள்ளார்.