Skip to main content

உயிரைப் பறிக்குமா 'கார்பா' நடனம்?; அதிர்ச்சி தரும் தகவல்

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

'Garpa' dance can take life; Shocking information

 

நவராத்திரி விழா என்றாலே அதிகம்  களைகட்டுவது வடமாநிலங்கள் தான். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாக நவராத்திரி விழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நவராத்திரி விழாக்களில் முக்கியமாக இடம் பெறுவது 'கார்பா' நடனம்.

 

குஜராத்தை பிறப்பிடமாகக் கொண்ட கார்பா நடனம் விடிய விடிய ஆடும் ஒரு வகை நடனமாகும். பாரம்பரிய ஆடைகளுடன் ஆண்கள் பெண்கள் என அனைவரும் இசைக்கு ஏற்ப இடைவிடாமல் விடிய விடிய நடனமாடுவர். இந்த நிகழ்ச்சிக்கு குஜராத் மாநிலத்தில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் அண்மையில் குஜராத்தில் பரோடா மாவட்டத்தில் 'கார்பா' நடனம் ஆடிய 13 வயது சிறுவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்த 10 பேரில் 13 வயது சிறுவன் தவிர மற்ற ஒன்பது பேரும் நடுத்தர வயது கொண்டோர் மற்றும் இளைஞர்கள் என்பது தெரிய வந்துள்ளது. நவராத்திரி விழா தொடங்கிய முதல் ஆறு நாட்களில் மாரடைப்பு தொடர்பாக 521 அழைப்புகளும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவ சேவைக்காக 108 ஆம்புலன்ஸ் வேண்டும் என 609 அழைப்புகளும் வந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் 'கார்பா' நடன நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு  'கார்பா' நிகழ்ச்சியில் மூன்று பேர் மாரடைப்பால்  உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்தான கல்லூரி கலை நிகழ்ச்சி; மொட்டை மாடியில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 college art show canclelled students protest by sitting on the terrace

சென்னை ராயப்பேட்டையில் உள்ள 'நியூ காலேஜ்' கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்த மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆண்டுதோறும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள  நியூ காலேஜ் கல்லூரியில் ஆண்டு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திட்டமிட்டபடி வழக்கம்போல் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நியூ காலேஜ் மாணவர்கள் மொட்டை மாடி பகுதியில் அமர்ந்து  கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் மாணவர் ஒருவர் ஆபத்து உணராமல் மொட்டை மாடியில் ஆபத்தான பகுதியில் அமர்ந்து போராட்டம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Next Story

'நாளை மறுநாளுக்குள் சரணடைய வேண்டும்'- கெடு வைத்த உச்சநீதிமன்றம்

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
'Tomorrow must be surrendered by the day after tomorrow'- Supreme Court said

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் கைதாகி நீதிமன்றத்தினால், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு கடந்த ஆண்டு விடுதலை செய்திருந்தது. அதாவது கோத்ரா வழக்கு தொடர்பாக குஜராத் அரசு அமைத்த சிறப்புக் குழுவின் பரிந்துரையின்படி நன்னடத்தை அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாகக் கூறி குஜராத் அரசாங்கம் அவர்களைக் கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக் காலம் முடிவதற்குள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் குற்றவாளிகள் விடுதலை குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவு செய்யலாமே தவிர, குஜராத் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது எனக்  குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், நாகரத்தினா அமர்வு முன்பு கடந்த 8 ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருவதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவெடுக்க வேண்டும். 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது. மேலும் பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையை காப்பது மிகவும் முக்கியமானது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளும் 2 வாரங்களில் சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து  குற்றவாளிகள் 3 பேர் தரப்பில், சரணடைய மேலும் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘சட்ட ஆலோசனை பெற நேரம் தேவை என்றும், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் சரணடைய அவகாசம் வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் குற்றவாளிகள் சரணடைவைத்தற்கு கூடுதல் அவகாசம் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அவகாசம் கேட்டு தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ததோடு நாளை மறுநாளுக்குள் சரணடைய வேண்டும் என கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.