Skip to main content

‘ஒன்றிய’ சர்ச்சைக்கு விளக்கமளித்த புதுச்சேரி கவர்னர் மாளிகை! 

Published on 01/07/2021 | Edited on 01/07/2021
Puducherry Governor's House explains 'Union' controversy

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் - பாரதிய ஜனதா கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 27.06.2021 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற எளிய விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லக்ஷ்மிநாராயணன், ஜெயக்குமார், சாய். சரவணகுமார், சந்திர. பிரியங்கா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இந்தப் பதவிப் பிரமாண நிகழ்ச்சியின்போது அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, “இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுச்சேரி ஆட்சிப் பரப்பு” என உறுதிமொழியை வாசித்தார்.

 

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து ‘மத்திய அரசு’ என்று அழைப்பதற்குப் பதிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மற்றும் கட்சியினர் ‘இந்திய ஒன்றிய அரசு’ என்று பயன்படுத்துகின்றனர்.  அதற்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் பாஜக கூட்டணி அரசு அமையும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் ‘இந்திய ஒன்றியம்’ என அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ‘இந்திய ஒன்றியம்’ என்ற வார்த்தை பயன்பாடு குறித்த சர்ச்சைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. 

 

Puducherry Governor's House explains 'Union' controversy

 

அதில், “புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இரு தினங்களுக்கு முன்பு புதிய அமைச்சர்களுக்கு தமிழில் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். 40 ஆண்டுகளுக்குப் பின் பெண் அமைச்சர் ஒருவர் பதவியேற்ற பெருமைமிகு நிகழ்வும் நடந்தேறியுள்ளது. அத்தகைய பெருமை மிக்க நிகழ்வில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி பல ஆண்டு காலமாக புதுச்சேரி அரசால் மரபாக பயன்படுத்தப்பட்ட தமிழ் உறுதிமொழி படிவத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் தமிழில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்தப் பெருமையை மறைக்கும் அளவுக்கு ‘இந்திய ஒன்றியம்’ என்ற வார்த்தை வேண்டுமென்று திரித்துக் கூறப்பட்டுவருகிறது. 'ஒன்றிய அரசு' என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.

 

ஆனால் 'ஒன்றிய அரசு' என்று துணைநிலை ஆளுநர் கூறினார் என்று பொத்தாம் பொதுவாக கருத்து தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறு தமிழ்நாடு அமைச்சர்கள் பதவியேற்கும்போது 'தமிழக அமைச்சர்களாக பதவியேற்கிறோம்' என்று கூறினார்களோ, அதேபோல் Indian union territory of puducherry என்ற வாசகம் 'இந்திய ஒன்றியம் புதுச்சேரி ஆட்சிப் பரப்பு' என மிக அழகாக வெகு காலத்திற்கு முன்பே புதுச்சேரி தமிழ் அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்தப் படிவம்தான் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து அதன்பின்பு இந்திய ஆட்சிக்குட்பட்டதால் Indian union territory என்கிறார்கள். அதாவது ‘இந்திய ஒன்றிய ஆட்சிப் பரப்பு’. அதனால்தான் ஒன்றியம் என குறிப்பிடுவது union territory என்ற யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத்தான். இங்கு எங்கேயுமே மத்திய அரசு என்று குறிப்பிடப்படவில்லை.

 

Puducherry Governor's House explains 'Union' controversy

 

அதனால் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறியதாக திரித்துக் கூறுவது கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி இந்திய அரசின் ஆளுமைக்கு உட்பட்டிருக்கும் நிலப்பரப்பு. அதனால் 'இந்திய ஒன்றிய புதுச்சேரி நிலப்பரப்பு' என்றுதான் சொல்கிறோமே தவிர, இந்திய தேசத்திற்கான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா அங்கே நடைபெறவில்லை. எனவே மாநில அரசுகளின் பதவியேற்பு விழா படிவத்தில் மத்திய அரசு என்ற வார்த்தை இடம்பெறாது. அவ்வாறு இருக்கையில் புதுச்சேரியில் மட்டும் ஒன்றிய அரசு என்று சொல்லப்பட்டது என்று சொல்வது உள்நோக்கம் கொண்டது. ஆகவேதான் இந்த விளக்கம் தேவைப்படுகிறது. 

 

தமிழ் மண்ணில் தமிழில் பதவியேற்ற பெருமையை நிலைநிறுத்த வேண்டும். ஆனால் அதன் மாண்பைக் குறைக்கும் வகையில் ஒன்றிய என்ற சொல்லாடல் சிலரால் தவறாக கருத்து பரப்பப்படுகிறது. இதுபோன்ற சலசலப்புகளால் பலரது தியாகத்தால் உருவான பலமான இந்திய இறையாண்மையைக் குறைக்க முயல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.