இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மாதாந்திர ப்ரீ-பெய்டு திட்டங்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி (திட்டம் செல்லுபடியாகும் காலம்) அளித்து வருகின்றன. இந்தநிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் குறைந்தபட்சம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு சாதாரண ரீ-சார்ஜ் திட்டம், ஒரு சிறப்பு கட்டண திட்டம் (special tariff voucher), ஒரு காம்போ திட்டத்தையாவது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மாதாந்திர திட்டங்களுக்கு வருடத்திற்கு 13 முறை ரீ-சார்ஜ் செய்யவேண்டிய நிலை இருப்பது, தாங்கள் ஏமாற்றப்பட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக வடிக்கையாளர்களிடம் இருந்து வந்த புகார்களை, இந்த புதிய உத்தரவுக்கான காரணமாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவு தொடர்பான அறிவிக்கை வெளியான 60 நாட்களில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதால், விரைவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மாதாந்திர ப்ரீ-பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.