மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் சுவேந்த் அதிகாரி மம்தாவைத் தோல்வியடையச் செய்தார். இருப்பினும், அம்மாநில முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட மம்தா, நவம்பர் ஐந்தாம் தேதிக்குள் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம், மேற்கு வங்கத்தின் சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர், பபானிபூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. இதில் பபானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடவுள்ளார்.
இந்தச்சூழலில் இன்று பபானிபூரில் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மம்தா உரையாற்றினார். அப்போது நந்திகிராமில் தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் சதி இருப்பதாக அவர் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி தொண்டர்களிடம் பேசுகையில் கூறியதாவது: இந்தாண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடந்த விதம் கடவுளுக்கு மட்டுமே தெரியும். மத்திய அரசால் பொய் சொல்லியும் என்னை வெல்லமுடியவில்லை. நந்திகிராமில் என் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பின்னால் சதி உள்ளது. வங்கத்தைப் பற்றி அவதூறு பரப்ப வெளியில் இருந்து 1000 குண்டர்கள் அழைத்துவரப்பட்டனர்.
பாஜகவால் அரசியல் ரீதியாகச் சண்டையிட முடியாது. அதனால்தான் அவர்கள் ஆணையங்களின் உதவியுடன் காங்கிரசைத் தடுக்கின்றனர். என்னிடமும் அதையே செய்கிறார்கள். செப்டம்பர் 10 ஆம் தேதி பபானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்வேன். சோபந்தேப் சட்டோபாத்யாய் ( பபானிபூர்சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்தவர்) கர்தாஹா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார். அவர் எனக்காக ராஜினாமா செய்தார். அவர் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பார்.இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.