புதுச்சேரி, காலாப்பட்டு பள்ள தெருவைச் சேர்ந்த பிரான்சிஸ்(58) என்பவர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமலா ஜெயசீலா(53) செய்யாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் பட்டப்படிப்பு பயிலும் நிலையில் செமஸ்டர் விடுமுறைக்காக வெளியூர் சென்றுவிட்டதால் தலைமை ஆசிரியர் தம்பதி இருவர் மட்டுமே தனியாக இருந்துள்ளனர்.
தற்போது கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் நேற்று இருவரும் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டனர். பின்னர் மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பினர். வீடு திரும்பிய அவர்கள், வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பீரோ இருக்கும் அறைக்கு சென்று பார்த்தனர். பீரோ திறந்து திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதிலிருந்து லாக்கர் உடைக்கப்பட்டு தங்க நெக்லஸ், ஆரம் செயின், மோதிரம், கம்மல் என 45 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோ மற்றும் லாக்கர் அறையின் சாவிகள் அதிலேயே இருந்தால் சிரமம் இன்றி எளிதாக நகைகளை ஒரு பையில் போட்டு அள்ளி சென்றுள்ளனர். ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக அவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து காலாப்பட்டு இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்.ஐ சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பிரான்சிஸிடம் புகாரை பெற்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.