தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கட்ச்பவுளி பகுதியில் பயோடைவர்சிட்டி ஃப்ளை ஓவர் என்ற பெயரில் புதிதாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் அதிவேகமாக வரும் சிவப்பு நிற கார் ஒன்று, அதன் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து பக்கச்சுவரை இடித்து, மேலே இருந்து கீழே பறந்து விழுந்தது.
அப்போது கீழே நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது கார் மோதியது. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனை தொடர்ந்து கார் ஓட்டுநர் உட்பட இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே விபத்துக்குள்ளான மேம்பாலம் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்று ஹைதராபாத் மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மாநகராட்சி உறுதியளித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கச்பௌலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அப்போது விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், அந்த காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
#WATCH pic.twitter.com/Tjl8yPaC8g
— ANI (@ANI) November 23, 2019