நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதனையடுத்து மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நிர்மலா சீதாராமனுக்கு நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான மாநில வரிப் பகிர்வை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் 28 மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு நிதி மொத்தம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் கோடியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு வரிப் பகிர்வாக ரூ.5 ஆயிரத்து 700 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இந்த வரிப்பகிர்வில் அதிகபட்சமாக பா.ஜ.க. ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு ரூ. 25 ஆயிரத்து 69 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.10 ஆயிரத்து 970 கோடி, மேலும் பீகார் மாநிலத்திற்கு ரூ.14 ஆயிரத்து 56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிப்பகிர்வு நிதி மூலம் மாநிலங்கள் பல்வேறு சமூக நலத்திட்டங்களையும், வளர்ச்சிக்கான மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களையும் மேற்கொள்ள முடியும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.