பி.எம். கேர்ஸ் நிதி மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 1,340 வென்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மக்களின் நிதி பங்களிப்பைப் பெறுவதற்காகக் கடந்த மார்ச் மாதம் பி.எம். கேர்ஸ் என்ற கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டது. அரசின் கட்டுப்பாட்டில் வரும், பிரதமர் பேரிடர் மீட்பு நிவாரண நிதி போன்று அல்லாமல், தனியாகப் பிரதமர் மோடியின் தலைமையில் அமைக்கப்பட்ட அறக்கட்டளை மூலம் இந்தக் கணக்கு உருவாக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த அறக்கட்டளையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆரம்பம் முதலே இந்தக் கணக்கில் நடக்கும் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில் பி.எம். கேர்ஸ் நிதி மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 50,000 வென்டிலேட்டர்கள் வாங்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1,340 வென்டிலேட்டர்கள் குறிப்பிட்ட மாநிலங்களுக்குத் தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாத இறுதிக்குள் 14 ஆயிரம் வென்டிலேட்டர்கள் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடி, கரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கு ஆதரவாக ரூ.100 கோடி என மொத்தம் ரூ.3,100 கோடி பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.